தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம் வெளியீட்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.இந்த ஆவணப் படத்தை திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சண்முக. செல்வகணபதி வெளியிட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற உதவிப் பதிவாளர் பா. ஜம்புலிங்கம் பெற்றுக் கொண்டார். அப்போது, சண்முக. செல்வகணபதி பேசியது:

தமிழ் இலக்கிய உலகில் யாழ் நூல் என்ற பெயரில் ஆய்வு நூலை 14 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி எழுதியவர் விபுலாநந்த அடிகளார். இலங்கையில் பிறந்த இவர் ராமகிருஷ்ண மடத்தில் துறவறப் பயிற்சி பெற்றார். மேலும், இலங்கையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஏழை மாணவர்கள் உறைவிடத்துடன் கூடிய கல்வி பெற வழி செய்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், கொழும்பு பல்கல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் பாரதியாரின் கவிதைகளை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தார். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் இவருடைய யாழ் நூல் 1947 ஆம் ஆண்டில் அரங்கேற்றம் கண்டது. எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இவரது ஆவணப் படம் வெளியிடப்பட்டது என்றார் அவர். இந்த விழாவுக்குக் கரந்தை உமாமகேசுவர மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வெ. சரவணன் தலைமை வகித்தார். ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவன், கரந்தை ஜெயக்குமார், ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரிச் செயலர் இரா. கலியபெருமாள், திருவையாறு தங்க. கலியமூர்த்தி, புலவர் ம. கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *