தில்லியில் ஜனவரி மாதம் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலக புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

தில்லி உலக புத்தகக் கண்காட்சி ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஹால் 7-இல் குழந்தைகளுக்கென தனி அரங்கு அமைக்கப்படவுள்ளது. அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்தகக் கண்காட்சி தொடங்கும் ஜனவரி 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு குழந்தைகளுக்கான ஐரோப்பிய யூனியன் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து சேத்னா இந்தியா மாணவர்களின் குழந்தைப் பாடல்களும் இடம்பெறும். 7-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராபிக் நாவல்கள் குறித்த நிகழ்ச்சி, ஹரிகிருஷ்ணா தேவ்சரே பால் சாகித்ய நியாஸ் அமைப்பின் குழந்தைகளின் குழுப் பாடல்கள், திறமையான குழந்தைகளுடன் சந்திப்பு, சுப் சங்கர் கிரேடிவ் அகாதெமியின் கலாôசர நடனம் ஆகியவை இடம்பெறும். பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை, அறிவியல், சுற்றுச்சூழலுக்கான மையத்தின் சார்பில் காமிக்ஸ் குறித்த பயிரலங்கம் நடைபெறும். குழந்தைகளுக்கான படைப்புகளின் நூலாசிரியர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளுக்கான நூலகத்தை நிர்வகிப்பது குறித்த பயிரலங்கம் நடைபெறும்.

8-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொம்மலாட்ட நிகழச்சி, நதிகள் இணைப்பு குறித்து குழந்தைகள் பங்கேற்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சி, குழந்தைகள் கதைசொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை குழந்தைகளுக்கான மைம் ஷோவும் நடைபெறும்.

9-ஆம் தேதி காலையில் எழுத்தாளர் ஜுஜா வைஸ்லேன்டருடான உரையாடல், வீரதீர செயல் விருது பெற்ற குழந்தைகளுடனான உரைடால், வீதி நாடகம் நடைபெறும். மாலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியும், கவிதை வாசிப்பும் இடம் பெறும்.

10-ஆம் தேதி குழந்தை இலக்கியப் படைப்பாளிகளுடன் உரையாடல், குழந்தைகள் பங்கேற்கும் கதை சொல்லும் நிகழ்வு, வீதி நாடகம் நடைபெறும். ஓவியம் குறித்து ஓவியர்களுடனான கலந்துரையாடல், பழங்குடியினரின் ஓவியங்கள் குறித்த நிகழ்வும் நடைபெறும்.

11-ஆம் தேதி ஓவியம் குறித்த கருத்தரங்கமும், ஜம்மு-காஷ்மீரின் கதைகள், கவிதைகள் குறித்த நிகழ்வு, இந்தியாவில் தயாரிப்போம், ஸ்கில் இந்தியா குறித்த குழு விவாதம், குழந்தைகள் பங்கேற்று கதை சொல்லும் நிகழ்வு நடைபெறும்.

12-ஆம் தேதி, வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு குறித்த கருத்தரங்கம், இசையுடனான கதை சொல்லும் நிகழ்ச்சி, நீரின் அவசியம் குறித்த நாடகம், கங்கை மற்றும் அதன் கிளை நதிகளை பாதுகாப்பது குறித்த குழு விவாதம் ஆகிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

13-ஆம் தேதி, குழந்தைகள் பங்கேற்கும் குழு நடனம், குழந்தை கவிஞர்கள் சந்திப்பு, பருவநிலை மாற்றம் குறித்த வினாடி-வினா, குழந்தைகளுக்கான பெண் எழுத்தாளர்கள் குறித்த கருத்தரங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடன நாடகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான ஜனவரி 14-ஆம் தேதி, கதக் நடனம், மறுசூழற்சி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து போஸ்டர், மாடல்கள் உருவாக்குதல், கதைசொல்லும் கலை குறித்த கருத்தரங்கம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அந்த உயரதிகாரி.

-நன்றி தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *