கோவில் நகரமாம் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டுள்ளார் கவிஞர் முனைவர் மருதம் கோமகன். ‘அம்மாவின் முத்தம்!’ என்ற தலைப்பே நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுகிறது.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு என யாவும் நேர்த்தியாக உள்ளன, பாராட்டுகள்!.

சிவகாசியில் நடந்த ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இந்த நூலை எனக்கு வழங்கினார் நூலாசிரியர். தமிழ்க் கவிதையை பெருமைப்படுத்திய கவிஞர் தமிழ்ஒளி அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியுள்ளார். அருட்கவி அதிரை அல்ஹாக் மு. முகமது தாஹா, நீலநிலா இதழ் குழுமம் நிறுவனர் நீலநிலா செண்பகராஜன் ஆகியோரின் அணிந்துரை நன்று.

   சூரியக்கரங்களுக்குப்
      பயந்து ஒதுங்கியது
      மலரில் பனித்துளி!

மலரில் உள்ள பனித்துளியை வாசகர் கண்களுக்கு காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர்.     நூலின் தலைப்பிலான கவிதை அம்மாவின் பாசத்தை, நேசத்தை, அன்பை, பண்பை உணர்த்தியது.

   ஒவ்வொரு முறையும்
      உயிரைப் புதுப்பித்தன
      அம்மாவின் முத்தம்!

கடவுளின் முன்னே ஏழை, பணக்காரன் வேறுபாடு. பணம் கட்டுபவர்களுக்கு சிறப்பு தரிசனம் அருகிலும், பணம் கட்டாத ஏழைக்கு தூரத்தில் தரிசனம் என்று பாகுபாடு நடப்பதை கண்டிக்கும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று, சிந்திக்க வைத்தது. பாராட்டுக்கள்.

ஆண்டவரை என்றும்
      ருசித்துப் பாருங்கள்
      பணக்கட்டுகளோடு!

கருப்புப் பணம் ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு பல ஏழைகளின் உயிர்களை வாங்கி விட்டனர்.  அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்பதைப் போல, புதிய பணம் அச்சடிக்க செலவானது பணம். கருப்புப் பணம் வரவே இல்லை, ஆனால் மக்கள் பாதிப்பு அடைந்தனர். சிறு தொழில்கள் அனைத்தும் மந்தமாகின.  இவைகளை உணர்த்திடும் ஹைக்கூ.

      வங்கியின் வாசல்
      மக்களுக்கு இன்று
      சொர்க்கவாசல்!

வங்கியில் மக்கள் வரிசையில் நின்றபோதே மரித்த அவலமும் அரங்கேறியது. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்பட பல கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துத் தான் கட்டி உள்ளனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

 ஆறுகள், குளங்கள், ஏரிகள்,
      கண்மாய்கள், வாய்க்கால்கள்,
      தொல்பொருட்கள்!

தாத்தா ஆற்று நீர் குடித்தார்; அப்பா வீட்டு (கிணற்று) நீர் குடித்தார்; மகன் பாட்டிலில் நீர் குடிக்கிறான்.  நீர்நிலைகளை எல்லாம் தொல்பொருள் சின்னங்களாகி விட்டன. குடிக்கும் நீரும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விலைக்கு வாங்கிடும் துன்பநிலை இன்று. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன தொழில்நுட்பத்துடன் கரிகாலன் கட்டினான் கல்லணை!.  ஆனால் இன்று அதனையும் நாம் பாதுகாக்கத் தவறி விட்டோம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

   கல்லணையில் சாக்கடை
      கண்ணீர் வடிக்கிறது
      கரிகாலன் சிலை!

கவியரங்கில் சிலர் சொன்ன வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்லி சுவைஞர்களைத் துன்பப்படுத்துவது உண்டு. அதனைக் கண்டித்து ஒரு ஹைக்கூ.

 ஒரே வார்த்தை!
      திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது
      கவியரங்கம்!

உலகிற்கே பண்பாடு, வீரம், காதல், தன்மானம் கற்பித்தவன் தமிழன். உலகின் முதல் மனிதன் தமிழன், உலகின் முதல் மொழி தமிழ். உலகளாவிய புகழ்பெற்ற தமிழர் இன்று உலகம் சிரிக்கும் நிலை அடைந்த்தைக் கண்டு நொந்து வடித்த ஹைக்கூ நன்று!

என்று பொங்கும்
      தமிழர்களின் தன்மானச்
      சினக் கடல்?

இன்று நாட்டில் நடக்கும் அரசியல் அவலத்தை, கேவலத்தை, நாட்டு நடப்பை உணர்த்திடும் ஹைக்கூ, சிந்திக்க வைத்தது.

அவரவர் குழியை
      அவரவரே வெட்டுகிறார்கள்
      அரசியல் பழிவாங்கல்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம்நாட்டு நிலங்களைத் தாரை வார்க்கும் கொடுமையை உணர்த்திடும் ஹைக்கூ!

   எரிபொருள் குழாய்கள்!
      தமிழ் நிலங்கள்
      மடு வற்றிய மாடுகள்!

உலகமே வியந்தது தமிழர்களின் ஒற்றுமையைக் கண்டு மெரினா கடற்கரையெங்கும் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்களின் தலைகளே தென்பட்டன   , பீட்டா ஆட்டம் கண்டது, தடைகள் தகர்க்கப்பட்டது. இவற்றை  நினைவூட்டிதும் ஹைக்கூ நன்று!

காளைகள் ஒன்று கோடி
      காளைகளுக்குப் போராட்டம்
      ஜல்லிக்கட்டு!

பகுத்தறிவுச் சிந்தனை விதைக்கும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள் உள்ளன. அவற்றில் பதச்சோறாக ஒன்று.

அர்ச்சகரின் தட்டில்
      விழுந்த பணத்தில்
      சாதி தெரியவில்லை!

ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றி எழுதாத இலக்கியவாதி இலக்கியவாதியே அன்று.  மனிதாபிமானக் குரல் தருபவன் தான் உண்மையான இலக்கியவாதி.  நூலாசிரியர் ஈழத்துக்காக குரல் தந்துள்ளார், பாருங்கள்.

  ஈழத்துயர் கண்டு
      வள்ளுவனிடம் முறையிட்டன
      கடல் அலைகள்!

கோயில் கருவறையில் தமிழுக்கும், தமிழருக்கும் தீட்டு என்பது இன்றும் தொடர்கின்றது. தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் இன்னும் தமிழகத்தில் எடுக்கப்படவில்லை. கேரளாவில் எடுத்து விட்டனர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியவில்லை, தமிழில் அர்ச்சனை நடைபெறவில்லை. சிதம்பரத்தில் தொடங்கிய தமிழ் எதிர்ப்பு என்பது அமைதியாக தமிழகம் முழுவதும் தொடர்கின்றது என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

எத்தனை நூற்றாண்டுகள் தேவை
      அர்த்த மண்டபம் தாண்டித்
      தமிழ் உள்நுழைய!

புத்தனை வணங்குவோரும் புத்தன் போதனையைப் பின்பற்றாதது வேதனை!

பகுத்தறிவு எண்ணெய்
      வறண்டதால் மங்கியது
      புத்தனின் அறிவொளி!

நூல் ஆசிரியர் முனைவர் மருதம் கோமகன் அவர்கள் நாட்டு நடப்பை உள்வாங்கி ரௌத்திரம் பழகி வடித்த ஹைக்கூக்கள் நன்று, பாராட்டுக்கள்!

 

அம்மாவின் முத்தம்!: நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு,
பாரதி நகர் தெற்கு, கும்பகோணம்-612 001.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *