திங்கள்கிழமை பரபரப்போடு அந்த பேருந்து காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டது.கல்லூரியில் இருந்து நான் விடுதலையானபின் என்னை வரவேற்று அழைத்து செல்லும் நண்பன் இந்த பேருந்து மட்டும் தான்.

எனக்கு பிடித்தகடைசி வரிசை ஜன்னலோர சீட் ,கையில் ஜெயகாந்தன் சிறுகதைகள் இன்பமாக போகும் என் பயணம்.அந்த இன்பம் இன்று சில நிமிடங்களே நிலைத்தது .நகரின் மையப்பகுதியை அடைந்தது பேருந்து திடிரென்று கூட்டம் அலைமோதியது ,காளையர்களும் கன்னியர்களும் முட்டி மோதி கொண்டு ஏறுகிறார்கள்.காரணம் ,எங்கள் ஊருக்கு கடைசி பேருந்து இது தான்.என் அருகில் ஒரு உருவம் வந்து அமர்ந்தது.அவருடைய கருப்புக்கண்ணாடியும்,உதவிக்கு வைத்திருந்த கோலும் அவர்க்கு கண் தெரியாது என்று என் கண்களுக்கு தெரியப்படுத்தியது.அவர் கையில் உள்ளதை தவிர வேறு யாரும் அவருக்கு துணையாய் வரவில்லை. நான் லட்சியப்படுத்த வில்லை. ஒரு அசட்டு பார்வையோடு திரும்பி கொண்டேன்.அப்போது நான் பு த்தகத்தை தவிர யாரையும் பார்ப்பதாய் இல்லை.

“யாரு பா அது மேல ஏறு மேல ஏறு ……”

இளசுகளை ஊக்கப்படுத்தும் நடத்துனரின் சங்கீதத்தோடு பேருந்து நகர்ந்தது.என் புத்தகத்தின் பக்கங்களும் நகர்ந்தது.அரைமணி நேர அதிகவேக பயணத்திற்கு பிறகு நின்றது புத்தகமல்ல,நீலம்பூரில் பேருந்து. அவசர ஆவேசமாக எல்லோரும் எறங்கினார்கள் அதில் கருப்புக்கண்ணாடிக்காரரும் உண்டு, வாழ்க்கையில் மட்டும் தான் ஏறுவதற்கு சிரமப்பட வேண்டும். பேருந்தில் இறங்குவதற்கு சிரமப்பட வேண்டும். கருப்புக்கண்ணாடி தட்டு தடுமாறி இறங்க முற்பட்டு விழுந்தேவிட்டார் .சிலர் சில்லறை வாங்குவதில் குறியாய் இருந்தார்கள் பலர் ஆண்ட்ராய்டு களில் பிஸியாக இருந்தார்கள், அந்த பெரியவர் மீது ஓரக்கண்ணும் தங்கள் வேலைகளில் முழுக்கண்ணும் வைத்திருந்தார்கள். பாவம் அவருக்கு உதவ யாருமில்லையே என்ற ஏக்கத்தோடு நான் புத்தகத்தில் கண்ணைத்திருப்பினேன்.முன் இருக்கையில் இருந்து யாரோ ஒரு பெரியவர் வேகமா வந்தார் கருப்புக்கண்ணாடியை தூக்கிவிட்டு

“ஏம்ப்பா!கண்ணு தெரியாத ஒருத்தர் விழுந்து கிடக்குறாரு உங்களுக்கெல்லாம் உதவ தோனலயா? நீங்கெல்லாம் படிச்சவங்கள?”

என்று கர்ஜித்த போதே எனக்கு தெரிந்துவிட்டது அவர் பாமரர் என்று.மனிதநேயத்தை கற்று தர பி.ஏ டிகிரி தேவை இல்லை.பெரியவர் நல்ல உயரம். சுருண்ட முடி, அவரின் வெள்ளி தாடி தவிர அவருக்கு வயதாகி விட்டது என்றும் எதுவும் சொல்லவில்லை.” என்ன மனுசங்க இவங்க?” என்று பயணிகளை திட்டி கொண்டே கண்ணாடிக்காரரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு தானும் இறங்கினார்.அந்த திட்டுகளை யாரும் கண்டுகொண்டதை நினைவில்லை.இறங்கியவர் எதிரில் இருந்த டீ கடைக்காரனிடம் சொன்னார்.

“ஏம்ப்பா!ரெண்டு டீ போடு!”.

ஆச்சர்யத்தோடு இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். நடத்துனரின் விசில் பறந்தது பேருந்தும் பறந்தது.நான் அடுத்த பக்கத்தை புரட்டினேன் அதில் இருந்த முதல் வரி “எல்ல உயிர்களையும் தம் உயிர் போல நேசிப்பவன் மனிதன் ,மற்ற எல்லோரும் நடை பிணங்கள்!”

 

                                         -சரவண பிரகாஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *