புத்தக வாசிப்பு என்பது நமக்கு பல்வேறு அனுபவங்களையும் அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும்.
பல கருத்துக்களை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன.. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த புத்தகம்.. தமிழ் எழுத்துலகின் மிக முக்கியமான எழுத்தாளரான சா. கந்தசாமி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலில் அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் என்ற நூல் வரையிலான 25 நூல்கள் பற்றி பல்வேறு கருத்துக்களை அலசி ஆராய்ந்துள்ளார்.

நீல. பத்மநபன் எழுதிய பள்ளிக் கொண்டபுரம் என்ற நூலைப் பற்றி குறிப்பிடும் போது…தமிழுக்குள் தனக்கென ஒரு மொழியை உண்டாக்கிக் கொண்டு அதன் வழியாக நாவலை எழுதியிருக்கிறார். இந்நாவலில் சுற்றமும் நட்பும், நடவடிக்கைகளும் மலையாள மொழி சார்ந்து இருக்கிறது. ஆனால் நாவல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இலக்கியம் படைக்க மொழி தடை இல்லை என்பதை இந்நூல் உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு படைப்பு என்பது சொந்த துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழி வகை செய்வதோடு அதுதான் படைப்பு என்பதின் விளைவாகவும் இருக்கிறது. தமிழ்க்குமரி என்ற நூலில் கண்மணி ராஜம் என்ற தன் சின்னஞ்சிறு மகளின் இறப்பு தாளாமல் ச.து சு யோகியார் எழுதிய துக்ககரமான அந்த நெடுங்கவிதைக்காகவே அவர் சிறந்த கவிஞராக அறியப்பட்டார். அவரைப்பற்றி சா. கந்தசாமி சொல்லியிருக்கும் விதமே யோகியாரின் நூலை படிக்கத் தூண்டுறது.

இது போல் மொழி பெயர்ப்பு நூல்கள் சிலவற்றையும் எடுத்து, கருத்தும் எழுத்துமாக தொகுத்திருக்கும் நூலாசிரியர் கவிழாத படகு என்ற கட்டுரையில் ஸ்டீபன் கிரேனின் எழுத்துக்கள் பற்றி சொல்லும் போது, அமெரிக்க இலக்கியம் உருவாகிக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் தத்துவ சாரட்டின் மீதே தனது கதைகளை உருவாக்கிக் கொண்ட ஸ்டீபன் கிரேன் காம்மோடெர் கப்பலில் ஒரு மாலுமியாக இருந்தார். கியூபா அருகில் அந்த கப்பல் மூழ்கிய போது 30 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் அவர் கரையேறினார். அந்த கடல் அனுபவத்தை அவர் வடித்துள்ள விதம் யதார்த்த இலக்கியத்தின் உச்சம் என்று வர்ணித்துள்ளார். மொத்தத்தில் சா. கந்தசாமியின் கருத்தும் எழுத்தும் பல்வேறு நூல்களை ஒரே தொகுப்பில் படித்த அனுபவத்தை கொடுக்கும் அற்புதமான நூல்.

கருத்தும் எழுத்தும் – சா. கந்தசாமி
பக்.208 ரூ.150. கவிதா வெளியீடு, சென்னை

விமர்சனம்: திருமலை சோமு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *