தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை கொண்டுள்ள மு.வரதராசனார் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி, திருப்பத்தூர் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். தமிழ் இலக்கிய உலகை ஆளப்பிறந்த அந்தக் குழந்தைக்கு `திருவேங்கடம்’ என பெற்றோர் பெயர் சூட்டினர். எனினும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்பது அவருக்கு நிலைத்தது. தன் உயர் நிலைக் கல்வியை திருப்பத்தூரில் முடித்த மு.வ., 16-வது வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.

தமிழ் மொழியைப் பற்றி அவ்வப்போது யோசனையில் ஆழ்ந்த அவர் ழுத்தர் பணியிலிருந்து விடுபட்டு, கிராமத்துக்குச் சென்று திருப்பத்தூர் முருகைய முதலியாரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். 1935-ம் ஆண்டு முதல் 1938-ம் ஆண்டு வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-ம் ஆண்டு பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணிக்காக சென்னை வந்த மு.வ., அங்கு `கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்’ என்ற பொறுப்பை ஏற்றார். 1944-ம் ஆண்டில் `தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல். பட்டத்தையும் பெற்றார். திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு அந்நாளில் வெளிவந்த ‘நவசக்தி’ வார இதழை மு.வ. தொடர்ந்து படித்தார். அதன் நடை மு.வ.வைப் பெரிதும் ஈர்த்தது. தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் சான்றோர்களிடத்திலும் மேலும், மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கிணங்க, சென்னை, திருப்பதி, மைசூர், கேரளா, பெங்களூரு, ஆந்திரா, டெல்லி, மதுரை எனப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து மதிப்புமிக்க பதவிகள் அவரைத் தேடி வந்தன. பச்சையப்பன் கல்லூரியில் ‘பி..ஓ.எல்’ பட்டத்தோடு விரிவுரையாளராகச் சேர்ந்தவர், தன் முயற்சியால் எம்.ஓ.எல். பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். நாடு போற்றும் நல்ல தமிழ் அறிஞராகவும், மக்கள் பாராட்டும் மகத்தான தமிழ் எழுத்தாளராகவும் வளர்ந்தார். சென்னையில் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழர் மாநாட்டில், ‘சங்க இலக்கியம்’ பற்றிய மு.வ. எழுச்சியூட்டும் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

மேலும், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் இசைச் சங்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் கலை மன்றம், ஆங்கிலம் – தமிழ் அகராதிக் குழு, இந்திய மொழிக் குழு, சாகித்ய அகாடமி குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு மற்றும் மத்திய அரசு தேர்வாணையக் குழு போன்ற சமுதாயத்தை சீரான முறையில் வடிவமைக்கக்கூடிய பல்வேறு கல்விக் குழுக்களின் தலைமகனாக இருந்து, அங்கு தனக்கான தமிழ் முத்திரையைப் பதித்தார் என்பது அவரின் தனிச் சிறப்புகளுள் ஒன்று.

`சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பின் கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து, 1948-ம் ஆண்டு தமிழில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பெருமகனார் மு.வ. 1945-ம் ஆண்டு முதல் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர், 1948-ம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருந்து தமிழுக்குத் தொண்டாற்றினார். 1971-ம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.

`அகல் விளக்கு’, `கள்ளோ காவியமோ?’, `கரித்துண்டு’, `பெற்ற மனம்’, `நெஞ்சில் ஒரு முள்’, `மண் குடிசை’, `செந்தாமரை’ (மு.வ. தானே பதிப்பித்தது) போன்ற நாவல்களும், `குறட்டை ஒலி’, `விடுதலையா?’ போன்ற சிறுகதைகளும், அரசியல், அறம், பெண்மை, மொழி சார்ந்த கட்டுரைகளும், `தமிழ் நெஞ்சம்’, `ஓவச்செய்தி’, `இலக்கிய ஆராய்ச்சி’, `சங்க இலக்கியத்தில் இயற்கை’, `நடை வண்டி’, `நற்றிணை விருந்து’ போன்ற பல இலக்கியப் படைப்புகளும், சிறுவர் இலக்கியமும் மு.வ-வுக்குப் பெருமை சேர்த்த படைப்புகளில் சில.

மு.வ. தான் எழுதிய பெரும்பாலான நூல்களுள், தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டிலேயே வெளிவந்தன. இவர் எழுதிய `அகல் விளக்கு’ என்ற நாவலுக்கு 1963-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. `கள்ளோ காவியமோ?’ என்ற இவரது நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

கம்ப ராமாயணத்தின் தனிச் சிறப்புகளை தனக்கே உரிய பேச்சுவழக்கில் எடுத்துரைத்தவர். வள்ளுவமும் காந்தியமும் அவருக்குப் பிடித்தமானவை. தூய்மையான வாழ்க்கையில் பொதிந்துள்ள அறநெறிகளை அகிலத்துக்கு வழங்கியவர். திருவாசக வரிகளையும், தாயுமானவர் பாடல்களையும் தன்னகத்தே பதித்துக்கொண்டு தன்னை பண்படுத்திக்கொண்டதோடு, பெரியோர், சிறியோர், சான்றோர், சமூகத்தோர் போன்றோரிடம் வெளிப்படுத்தவேண்டிய நாகரிகப் பண்புகளையும் மரியாதையையும் பறைசாற்றியவர்.

மு.வ. தமிழுக்கு ஆற்றிய பல துறைப்பணிகளைக் கருத்தில் கொண்டு, 1972ஆம் ஆண்டு அமெரிக்கா ஊஸ்டர் கல்லூரி அவருக்கு டி.லிட் பட்டம் வழங்கிப் பாராட்டியது. மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சிறப்புடன் பணியாற்றிய மு.வ.வை தமிழக அரசு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு துணை வேந்தர் பதவியில் நீடித்திருக்கச் செய்தது. இதயவலி ஏற்பட்டு சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் மு.வ. சிகிச்சை பலனின்றி 10.10.1974 அன்று மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *