வாட்ஸ்ஆப் பற்றி அறியாத சிலருக்கு:

வாட்ஸ்ஆப் – செய்திகள் அனுப்பும் ஒரு சாப்ட்வேர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  இதில் பல வசதிகள் இருந்தாலும் இந்த கதைக்கு தேவையானதை சொல்கிறேன். இதில் நாம் ஒரு மெசேஜ் அனுப்பி அது நாம் அனுப்பிய நபர்க்கு சென்றுவிட்டால் இரண்டு டிக் வரும். அதே அந்த மெசேஜை அவர்கள் படித்து விட்டால் அவ்விரு டிக்குகளும் நீல நிறத்தில் மாறிவிடும்.

உதாரணம்: “ஹலோ” என்ற மெசேஜ் நாம் அனுப்பியவற்கு சென்றுவிட்டது. ஆனால் அதை இன்னும் அவர் படிக்கவில்லை. அதனால் இரண்டு டிக்குகள் மட்டும் உள்ளது.

இதே அந்த மெசேஜ் படித்த பிறகு,அவ்விரு டிக்குகளும் நீல நிறத்தில் மாறிவிடும்.

______________________________________
மணி : இரவு 11:55
டிசம்பர் மாதம் – 11ஆம் தேதி – வெள்ளிக்கிழமை
________________________________________

ரங்காவின் வாட்ஸ்ஆப் (Whatsapp) சிறு ஒலியை எழுப்பியது. அப்போதுதான் தூங்கலாம் என படுத்த அவன் மறுபடி எழுந்து சார்ஜில் வைத்த போனை எடுத்து பார்த்தான்.

Ram
2 new messages

ராம் – ரங்காவின் நண்பன். பல வருட சிநேகிதன். ரங்காவின் நெருங்கிய இரு நண்பர்களில் ஒருவன். ஒரு வேலை மற்றவர்களாக இருந்திருந்தால் போனை மறுபடி லாக் செய்து படுத்திருப்பான். ஆனால் இது ராம்.அதுவும் நாளை முக்கியமான வேலை வேறு உள்ளது.

மெசேஜை ஓபன் செய்தான் ரங்கா. இன்னும் தூக்க கலக்கத்திலே தான் இருந்தான். ஆனால் அவன் பார்க்க போகும் மெசேஜ் அவனை இன்னும் குறைந்தது 2 நாட்களாவது தூங்கவிடாது என்பதை சற்றும் அறியாமல் இருந்தான்.

“Dey…” அது ஆங்கில நடையில் உள்ள தமிழ் மெசேஜ். நாம நம்ம தமிழிலே பாப்போம்.

“டே, சத்தியமா என்னால முடியல. நாம பண்ணது கரெக்டா தப்பானு தெரில. ஆனா எனக்கு வேற வழி தெரியல.”  “மன்னிச்சிடுடா. இதுக்கு மேலயும் என்னால இந்த உலகத்துல இருக்கமுடியாது.”

இரு குழப்பமான மெசேஜை பார்த்த ரங்கா ஒரு வேளை ராம் தப்பான முடிவு எதாவது எடுத்திருப்பனோ என எண்ணும் போது ரங்காவின் இருதயம் படபடத்தது. அவன் முழு தூக்கம் கலைந்தது. நெற்றியில் வியர்வைத் துளிர் எடுத்தது, ஏன் சிறிது கண்ணிலும் கூட.

அதே நேரத்தில் ராமின் மொபைலில் தெரிந்த இரண்டு நீல நிற டிக்கை பார்த்து ஒரு முகம் சிரித்து கொண்டது.

________________________________________
மணி : 12:01 A.M
டிசம்பர் மாதம் – 12ஆம் தேதி – சனிக்கிழமை பிறந்து ஒரு நிமிடம்
________________________________________

ரங்கா ராமின் மொபைலுக்கு கால் செய்தான் “நீங்கள் அழைக்கும் எண்ணாது switch off செய்யபட்டுள்ளது அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. தயவசெய்து சிறிது நேரத்திற்கு பிறகு முயற்சிக்கவும்” என்றது. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். ஒரு பயனும் இல்லை.

அவனது அம்மா நன்றாக தூங்கி கொன்டிருந்தாள்.

“மா… மா….அம்மா” என அவளது கையை அசைத்தவாறு அவனது அம்மாவை குரல் நடுக்கத்துடன் எழுப்பினான் ரங்கா. அவள் சற்றும் நடப்பது புரியாது ஒரு வித குழப்பத்துடன் எழுந்தாள்.
“என்னடா நடு ராத்திரில”

அவனது T.Shirt முழுவதும் பயத்தின் வியர்வையில் நனைந்திருப்பதை அவள் இருட்டில் கவனிக்கவில்லை.

“ ராம்’கு எதோ திடிர்னு மயக்கமாம்..கால் பண்ணான்.. ஒரு மாறி இருக்குனு… நான்.. நான் போய் பாத்துட்டு வந்துடறேன்” “அதுக்கு ஏன்டா நடுராத்திரல போற. அவன எதாச்சும் சாப்ட்டு நல்ல மருந்தா போட சொல்லு. நாளைக்கு காலைல நீ போ.”
“மா.. அவன் வீட்ல யாரும் இல்ல. இப்போதான் கால் பண்ணான். நான் போய் பாத்துட்டு வந்துடறேன்” என்று சொல்லியாவரே வீட்டின் பூட்டை திறந்தான். அவன் அம்மா எதோ சொல்லி கொண்டே இருந்தால். இவனது காதில் எதும் விழவில்லை. அவனது ஸ்கூட்டியை எடுத்தான்.
“ஏன்டா, இந்த கூலுர்ல இவ்ளோ வேர்வை” .
எதையும் காதில் வாங்காமல் அவனது கை வேகமாக வண்டியை முறுக்க , வண்டி ராமின் வீட்டை நோக்கி சென்றது.

________________________________________
மணி : இரவு 10:55
டிசம்பர் மாதம் – 11ஆம் தேதி – அதே வெள்ளிக்கிழமை
________________________________________

ஹெல்மெட் அணிந்திருந்தான் அவன்.தோளில் காலேஜ் பாக் (college bag). இயல்பான உடை. ஒரு சாராசரி கல்லூரி மாணவன் போன்ற அவனது வெளித்தோற்றம். யமஹா RX100 வண்டி. சுமார் 60km/hr ஸ்பீட். அவனுக்கு அந்த வண்டி பொருத்தமாகதான் இருந்தது. குளிர் மற்றும் மழையின் சாரலுக்கு வசதியாக ட்ரைவிங் ஜாக்கெட் போட்டுகொண்டு ஒய்யாரமாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

பாரதியார் தெருவில் அவனது வண்டி நுழைந்தது. அவனுடைய வீடும் அங்கில்லை. அவனுக்கு தெரிந்தவர்களும் அங்கில்லை.
இல்லை இல்லை. இருக்கிறான் ஒருவன்.

ஒரு வீட்டின் முன்பு அவனது யமஹாவை நிறுத்தி இறங்கினான். பாக்கெட்டில் இருந்து சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான். சிறுது நேரம் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.  சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ அவ்வழியே வந்தது. அவன் நிற்கும் இடத்தில் இருந்து ஒரு மூன்று வீடு தள்ளி நின்றது. சுமார் 50 முதல் 60 வயதுடைய ஒரு தம்பதி ஆட்டோவில் ஏறினார்கள், கையில் இரண்டு டூரிஸ்ட் பேக்குடன் , முகம் முழுவதும் மேக்கப்புடன்.

“யாருங்க இந்த பையன். புதுசா இருக்கு. நம்ம வீடு பக்கத்துல சிகரெட் பிடிச்சிட்டு இருக்கான்” அப்படின்னு அந்தம்மா கேட்க, அதற்கு “இந்த காலத்துல எந்த பசங்க ஒழுங்கா இருகாங்க. எல்லாம் தண்ணி, சிகரெட், செல்போன்னு சுத்தறாங்க. எதோ நம்ம பையன் வீட்ல இருக்கானேனு சந்தோஷப்பட்டுக்கவேண்டித்தான்” என்றார் அந்தம்மாவின் வீட்டுகாரர்.
ஆட்டோ அவனை கடந்து சென்றது. அவன் உதட்டில் ஒரு சிறு சிரிப்பு எழுந்தது.
சிகரெட் தீர்ந்தது.
வாட்ச் ‘இரவு 11:20’ என்றது.

________________________________________
மணி : 12:20 A.M
டிசம்பர் மாதம் – 12ஆம் தேதி – சனிக்கிழமை பிறந்து இருபது நிமிடம்
________________________________________

யாரும் இல்லாத அந்த பாரதியார் தெருவில் அதிவேகமாக வந்தது ரங்காவின் ஸ்கூட்டி. அவன் போட்ட ப்ரெக்கில் மழையின் சலசலப்பு காரணமாக அவனது வண்டி ராமின் வீட்டிலிருந்து ஒரு வீடு தள்ளியே நின்றது. நான்கு வீடு தள்ளி அனாதையாக நின்று கொண்டிருந்த யமஹா RX100ஐ இவன் கவனிக்கவில்லை.

ராமோட அப்பா அம்மா கோயம்பத்தூரோ இல்ல மதுரைக்கோ போறாங்கனு சொன்னது ரங்காவிற்கு அவனிடம் இருந்து அப்படி ஒரு மெசேஜ் வந்த போதே ஞாபகம் வந்தது.
ராமின் வீட்டு கேட் பூட்டாமல் இருந்தது. கேட்டை மெதுவாக சத்தமில்லாமல் திறந்தான். ஜன்னல்கள் மூடி இருந்தன. ஆனால் வீட்டினுள் எதோ லைட் எரிந்து கொண்டு தான் இருந்தது. வாசல் கதவு மிக அருகில் நின்றான். சாவி போடும் துளை வழியாக ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. எதற்கும் போலீசிடம் இப்படி ஒரு மெசேஜ் வந்ததை சொல்லி அவர்களுடன் வரலாமா என்று யோசித்து மறுபடி வெளியே வந்தான்.  மழை பெய்ய தொடங்கியது.இம்முறை நல்ல வேகமாக.
________________________________________
மணி : இரவு 11 : 25
டிசம்பர் மாதம் – 11ஆம் தேதி- அதே வெள்ளிக்கிழமை
________________________________________
அவனது யமஹாவை அங்கேயே நிறுத்திவிட்டு பையில் இருந்த கையுறையை (Hand Gloves) எடுத்து தன் கையில் மாட்டிக்கொண்டான். ஒரு மீட்டர் அகலம் உள்ள இரும்பு ராடை பையில் இருந்து எடுத்துக் கொண்டான். ராமின் விட்டு கேட் பூட்டப்படவில்லை. இவன் ஷுவை கழட்டவில்லை. கதவை தட்டினான்.

ஒரு வேளை திரும்பி போன அப்பா அம்மா தான் திரும்பி வரார்களோ என எண்ணி கதவை வேகமாக திறந்தான் ராம். வேறு யாரோ நிற்பதை கண்டு அதிர்ச்சியடைதான்.

“சார், யாரு நீங்க? என்ன வேணும்?”
அவன் பாளரென்று ராமின் கன்னத்தில் அறைந்து வீட்டினுள் நுழைந்து கதவை சாத்தினான்.
“ ****… கத்துன.. கொன்றுவேன்.. மூடிட்டு அங்க உக்காரு……….. யார நீங்க.. அவ்ளோ தில்லா.. அண்ணன் மேலே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க”
ஷோவ்பாவில் உக்கார நினைத்தான். ‘வேண்டாம்…’..விலகி வந்து திரும்பி அவனை அறைந்தான்.
அவன் கையில் இருந்த இரும்பு ராடை பார்த்த ராம் “இல்லனா… நான் வேணாம்னு தான் சொன்னேன்.. ரங்கா தான்… நான் அவன வாபஸ் வாங்கிட சொல்றேனா. நான் சொன்னா கேப்பான். ப்ளீஸ்னா… எதுவும் பண்ணாதிங்க.. ப்ளீஸ்…”
“அத நான் போன் பண்ணி சொல்லும் போதே பண்ணிருக்கணும்.. ரொம்ப லேட்டு…” எனக் கூறி இரும்பு ராடையே பார்த்துக்கொண்டிருந்தான்.  “இல்லனா..சாரினா.. நாங்க வாபஸ் வாங்கிடறோம் .. எதுவும் பண்ணாதிங்க.. ப்ளீஸ்…”
“சரி, நீ அவனுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லு..”
“ஒன்னும் பண்ண மாட்டிங்கள”
“கால் பண்றா முதல”
போனை எடுக்க சென்றான் ராம். ப்ரிட்ஜ் (Fridge) மேலே இருக்கும் போன் பக்கத்தில் இருந்த பெரிய பீங்கான் பொம்மையை பார்த்த அவனுக்கு வேறு ஐடியா தோன்றியது.
ராம் அந்த பீங்கானை தூக்கி அவன் மேலே எறிந்தான். லேசாக அவன் மீது பட்டு அது கீழே விழுந்து நொறுங்கியது. வெளியில் லேசான மழை. இந்த உடைந்த சத்தம் வெளியில் கேட்க வாய்ப்பு ரொம்ப குறைவு.
கோபமடைந்த அவன் கையில் இருந்த இரும்பு ராடினால் ராமின் தலையில் அடித்தான்.
ராம் மயக்கம் அடைந்தான்.
சிறுது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியாக அவன் ராமின் மொபைலை எடுத்தான்.
அதில் ‘மணி: 11:53 P.M’
வாட்ஸ்சப்பை ஓபன் செய்தான். கம்ப்ளைன்ட் கொடுத்த ரங்காவிடம் தான் ராம் கடைசியாக பேசி இருந்தான்.
இவனே டைப் செய்தான்
“டே, சத்தியமா என்னால முடியல. நாம பண்ணது கரெக்டா தப்பானு தெரில. ஆனா எனக்கு வேற வழி தெரியல.”
“மன்னிச்சிடுடா. இதுக்கு மேலயும் என்னால இந்த உலகத்துல இருக்கமுடியாது.”
அனுப்பின 30வது நொடியில் ரங்கா படித்ததற்கு சாட்சியாக இரு நீல நிற டிக்கை காட்டியது வாட்ஸ்சப்.
அடுத்த நொடி போனை ஆப் செய்தான்.
________________________________________
மணி : 12:30 A.M
டிசம்பர் மாதம் – 12ஆம் தேதி – சனிக்கிழமை பிறந்து முப்பது நிமிடம்
________________________________________

மறுபடியும் மழை பெய்ய தொடங்கியது.இம்முறை நல்ல வேகமாக.
கதவை தட்டினான் ரங்கா. கதவு தானே திறந்துக்கொண்டது.
“ராம்……மா..” அதே இரும்பு ராடு.. இம்முறை ரங்காவின் தலையில்.
ரங்கா லேசான மயக்கத்தில் கீழே விழுந்தான்.
மெதுவாக அவன் நினைவு கொழம்பியது. ஆனால் எதற்காக இந்த அடி . யார் அவன் என்னை அடித்தவன். அவன் நினைவுகள் கொஞ்சம் பின்னே சென்று ஆராய்ந்தது.

“நான், ராம், பாலா நாங்க மூணுப்பேர் அன்னிக்கு அந்த வழியா போய் இருக்கக்கூடாது. அதும் அந்த டைம்ல. ஒரு க்வாளிஸ் வண்டி, அஞ்சு ஆறு பேர் கைல அரிவாளோட, கீழ ஒருத்தவன் ரத்த வெள்ளத்துல. அந்த கார்ல இருந்தவன நாங்க மூணு பெரும் ஏற்கனவே பாத்திருக்கோம். இந்த ஏரியா தான் அவன். ஆனா அவங்க யாரும் எங்கள பாக்கல. பாலா சொன்னான். வா திரும்பி எதுவும் பாக்காத மாறி போய்டலாம்னு.
அடுத்த நாள் நியூஸ்பேப்பர்ல பாத்தா அது ஒரு அக்ஸிடேன்ட்(accident)னு போட்டு இருந்தது. நான் தான் சொன்னேன், போலீஸ்’ல சொல்லலாம்னு. பாலா இதெல்லாம் வேணாம்ன்னு, பெரிய இடத்துகாரங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியாதுன்னு . ஆனா நான் எங்க கேட்டேன். திடீர்ன்னு தோனுச்சு அவங்க பண்றது தப்புன்னு.
போலீஸ்’ல நாங்க மூணுபேரும் தான் போய் கம்ப்ளைன்ட் குடுத்தோம், சாட்சியா கூப்டாலும் வாரோம்னு சொன்னோம் .அதுக்கு அப்புறம் அந்த இன்ஸ்பெக்டர் என்ன பண்ணாருனு தெரில. அவர் அவரோட கடமையா கரெக்டா தான் செஞ்சிருக்குனோம். இல்லனா எங்கள நாளைக்கு சாட்சி சொல்ல கோர்டுக்கு கூப்டு இருக்கமாட்டரே.
ஆனா ராமோட போன் நம்பர எப்படியோ கண்டுபிடிச்சு மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. சாட்சி சொல்ல வந்தா உடம்புல உயிர் இருக்காதுன்னு. அதையும் நான் பெருசா கண்டுக்கல. வயசு திமிரா, இல்ல நம்ம சைடு நியாயம் இருக்க திமிரானு தெரியல.
ராம் போக வேண்டாம்னு தான் சொன்னான். நானும் சரி வேணாம்னு அவன்கிட்ட சொல்லிட்டு நான் மட்டும் இல்லனா முடிஞ்சா பாலாவையும் கூட்டிட்டு போலாம்னு இருந்தேன்.ஆனா அதுக்குள்ள… “ முழு மயக்கம் அடைந்தான்.

அதே க்லோவஸ்(gloves) போட்ட கை இவனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தது.
அதில் “மணி : 12:53AM’
________________________________________
மணி : 12:55 A.M
டிசம்பர் மாதம் – 12ஆம் தேதி – சனிக்கிழமை பிறந்து 55 நிமிடங்கள்
________________________________________

பாலா அவனுடைய காதலியுடன் வாட்ஸப்பில் பேசி கொண்டிருந்தான்.  திடீரென மற்றவர் யாரும் மெசேஜ் செய்யாத அந்நேரத்தில் ரங்காவிடம் இருந்து இரு மெசேஜ்.
“டேய், சத்தியமா என்னால முடியல. நாம பண்ணது கரெக்டா தப்பான்னு தெரிய். ஆனா எனக்கு வேற வழி தெரியல.”
“மன்னிச்சிடுடா. இதுக்கு மேலயும் என்னால இந்த உலகத்துல இருக்கமுடியாது.”

-சியாம்சுந்தர் பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *