என் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் அதைச் சொல்வதனால் ஒரு உபயோகமும் இருக்கப்போவதில்லை. ஆனால் என் கடந்த கால நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கலாம். படிப்பினை என்பது சொந்த அனுபவத்தில் பெறுவதாக மட்டும் இருக்க கூடாது.

பிறரின் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கற்று க்கொள்வதாக இருக்க வேண்டும். என் அனுபவத்தை சொல்வதானால், யாரோ சிலரின் பாதைகளை அது சீர்படுத்தும் என்றால் அதுவே எனக்கான வெற்றியாக இருக்கட்டும். அரசியல் சாக்கடை என்று என் சகாக்கள் சொல்லும் போதும் அது உனக்கு ஒத்துவராது என்று உறவினர்கள் புத்தி புகட்டும் போதும் கேட்காத நான் இன்று கண்கெட்டப் பின் சூரிய நமஸ்காரமாய் என் மொத்த நாட்களையும் தொலைத்து விட்டு உபயோகமற்ற ஓட்டைப் பாத்திரமாக நிற்கிறேன்.

கடவுள் நம்பிக்கை பெரிதும் நான் கொண்டதில்லை. ஆனால் என் தலைவர்கள் மீதும் கட்சியின் மீதும் அளவற்ற பக்தியும் பணிவும் கொண்டவன். என் கட்சிக் கொடியை கண்டபோதெல்லாம் கருடனை அண்ணார்ந்து பார்ந்து கும்பிடும் பக்தி என்னுள் இருந்தது. தலைவர்களை நேரில் கண்டால் கேட்கவா வேண்டும். சன்னிதானத்தில் விழுந்து கும்பிடாத நான் பலமுறை தலைவர்கள் காலில் விழுந்து எழுந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் தோள் தொட்டு தூக்கிவிட்டவர்கள் வாழ்வில் என்னை, என் குடும்பத்தை கைதூக்கி விடவே இல்லை.

நான் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் அடிமட்ட தொண்டனாக இருக்கும் எல்லோர் நிலைமையும் கிட்டதட்ட என்னைப் போன்றுதான் என்று சொல்லவும் வேண்டுமா.! தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 50 ஆண்டுகளாக இரட்டை இலையும் சூரியனும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது.. இந்த காலகட்டத்தில் கொடிகட்டி கோஷம் போட்ட என்னைப் போன்ற தொண்டர்களின் கைகள் எங்கே ஓங்கி இருக்கிறது.

நேற்று நான் இன்று என் மகன் என்று கொத்தடிமைகள் போல் தலைமுறைக்கும் அடிமட்ட தொண்டனாகவே இருக்க வேண்டிய நிலையைத்தான் இன்றைய தமிழக அரசியல் கட்சிகளிடையே காணமுடிகிறது. அமைச்சரின் பையன் அமைச்சராக முடியும், முதல்வரின் மகன் முதல்வராக முடியும், தொண்டனின் மகன் தொண்டனாகத்தானே இருக்க வேண்டும் என்ற விதியை எழுதியவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்.. கட்சிக்கான என் உழைப்பில் பாதியை ஒரு பெருநிறுவனத்தில் செய்திருந்திருந்தால் குறைந்த பட்சம் அந்த நிறுவனத்தின் மேலாளராகவாவது வந்திருப்பேன். என்ன செய்வது.. படிப்பறிவு இல்லாமல் முடத்தனமாய் புகழின் மோகத்தில் என் தலைவன் மீது பாசம் வைத்து விட்டேன்..! தலைவர் வரும் போது அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதே என் அதிகபட்ச நிறைவாக அன்று இருந்துவிட்டது. அதனால் தான் இன்றும் என் தலைமுறை இலவச அரிசிக்காக ரேசனில் காத்திருக்கிறது…

ஆங்கிலேயனிடம் விசுவாசம் காட்டி என் தாத்தன் சேர்த்த சொத்துக்களை எல்லாம் இந்த அரசியல்வாதிகள் மீது கொண்ட பற்றால் நான் தொலைத்ததுதான் மிச்சம். தொண்டு என்பது பிரதிபலன் எதிர்பாரமல் செய்வது தான் அதனால் தானோ என்னவோ எந்த பலனையும் தொண்டர்களுக்கு கிடைக்க விடாமல் செய்துவிடுகின்றனர் அரசியல் பெரும்புள்ளிகள். காலங்கள் மாறுகிறது.. காட்சிகள் மாறுகிறது.. ஏன் ஆட்சியாளர்களும் மாறுகிறார்கள். தொண்டன் மட்டும் தொண்டனாகவே ஒரு வேளை உணவுக்கும் 200, 300 ரூபாய்க்கும் கொடிகட்டி கொடிகட்டி கூட்டத்தை சேர்த்து அந்த கூட்டத்திலேயே தொலைந்து போகிறான்.

விடியல் எங்கே.. வெளிச்சம் எங்கே என்று தேடும் தன் குடும்பத்துக்கு, தலைவர் அடுத்த மாதம் வரச்சொல்லி இருக்கிறார். இந்த மாதம் பாரக்கச் சொன்னார். நாளை எப்படியும் வேலை முடிந்துவிடும் என்று பதிலைசொல்லி சமாளித்தாலும் நாங்கள் ஒருபோதும் தலைவர்கள் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க வில்லை. தேர்வில் தோற்ற போது கூட அழாத நாங்கள் எங்கள் கட்சி தேர்தலில் தோற்று விட்டால் ரத்தக் கண்ணீர் சிந்தி இருக்கிறோம். வெற்றி பெற்ற போதும் அடைந்த மகிழ்ச்சியை தவிர எங்களுக்கு வேறு எதுவும் கிடைத்ததில்லை. காலங்கள் ஓடி முடிந்திருக்கிறது…. வயோதிகம் உடலிலும் தளர்ச்சி மனதிலும் தெரிகிறது.. இப்போதும் யார் இந்த கட்சிக்கு உண்மையாக உழைக்கப் போகிறார்களோ என்ற ஏக்கம்தான் என் கண்ணில் தெரிகிறதே தவிர வேறு எதுவும் இல்லை.. வாழ்க ஜனநாயகம் வெல்க.. பணநாயகம்..!

One thought on “ஒரு அரசியல் தொண்டனின் அடிமனக் குமுறல்

  1. ThanhX

    I see your website needs some fresh articles.
    Writing manually takes a lot of time, but there is tool for this time consuming task, search for; Wrastain’s tools for content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *